
ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - ஒல்லி ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒல்லி ஹாரிஸ் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஜார்ஜ் முன்ஸி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் களமிறங்கிய பிரண்டன் மெக்முல்லன் வழக்கம் போல் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
ஆனால் அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 8 ரன்களுக்கும், மேத்யூ கிராஸ் 7 ரன்களுக்கும், மைக்கேல் லீஸ்க் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த பிராண்டன் மெக்முல்லன் இந்த போட்டியிலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 56 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மார்க் வாட்டும் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.