
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரமிங்கமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்துவிட்டு போட்டியின் முதல் நாளிலேயே டிக்ளேரும் செய்தது.
இதன்பின் தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா 141 ரன்களும், அலெக்ஸ் கேரி 60 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பின் 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 273 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
இதன் மூலம் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியின் கடுமையான போராட்டம், திட்டங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி 2 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான இந்த டெஸ்ட் போட்டி தான், கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என அனைவரும் நடப்பு ஆஷஸ் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.