
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய நிலையில், நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் வங்கதேச அணி வேகப்பந்துவீச்சாளர் தன்ஸிம் ஹசன் ஷாகிப் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான போது காயத்தை சந்தித்த தன்ஸிம் ஹசன் இப்போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியை எட்டாததால், இம்முடிவை எடுத்துள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அணி மருத்துவர் இஸ்லாம் கான், தன்ஸிம் தனது வலது தொடை தசையில் வலி மற்றும் அசௌகரியத்தை அனுபவித்து வருகிறார். அவர் இன்று பயிற்சியில் சிறப்பாக உணரவில்லை. இதனால் நாளைய போட்டியிலிருந்து விலகியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.