
இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னார் இஸ்லமாபாத் வந்தடைந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 1 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9 ஆம் தேதி முல்தானிலும், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி கராச்சியிலும் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளே மோதின. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.