
ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இந்தியா ஏழு முறையும், இலங்கை ஆறு முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்று இருக்கிறது. நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருக்கிறது.
கடந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றில் வென்று, இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. இதேபோல் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் முதல் முறையாக ஒரு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கு அடுத்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது.
இந்தியா வென்ற இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்த பொழுதும், இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்தது. விராட் கோலி தனது அற்புதமான பேட்டிங்கால், அந்த போட்டியை தனி ஒரு வீரராக வென்று கொடுத்தார். இப்பொழுது வரை அந்தப் போட்டி பலருக்கும் மறக்க முடியாத ஒரு போட்டியாக இருக்கிறது.