
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இதில் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா சர்வதேச மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அவருக்கு துணையாக விளையாடிய ஷாஃபாலி வர்மாவும் சர்வதேச மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 292 ரன்களை கடந்த சமயத்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 149 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை இழந்தார்.