
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய மகளிர் அணி 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியதுடன் வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைட் வாஷ் செய்தும் மிரட்டியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டியானது சில்ஹெட்டில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தயாளன் ஹேமலதா 37 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 33 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் மற்றும் நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச மகளிர் அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் அணியின் வெற்றிக்காக போராடிய ரிது மோனி 37 ரன்களையும், சொரிஃபா கதும் 28 ரன்களையும் சேர்த்த நிலையிலும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்ன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.