
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பலப்படுத்தவும், அதற்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்வதற்காகவும் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க முடிவு செய்தது.
அதனடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இத்தொடரின் மூலம் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் பிரச்சினை தீர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இருவரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு, தனக்கான இடத்தை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டார். மேலும், பேட்டிங் வரிசையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. பந்துவீச்சில்தான் அக்சர் படேலை தவிர அனைவரும் சொதப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி, அக்டோபர் 2,4 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம், கௌகாதி, இந்தூரில் போட்டிகள் நடைபெறும்.