
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இன்று பெங்களூரு நகரில் நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் அரையிறுதிச்சுற்றுக்கு செல்ல இரு அணிகளுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ஆனால் அதற்கேற்றார் போல் பந்து வீச்சில் அசத்த தவறிய அந்த அணியை அடித்து நொறுக்கிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 401 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து நியூசிலாந்து சாதனையும் படைத்தது.
நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக இளம் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்தரா சதமடித்து 108 ரன்கள் குவித்து அறிமுக உலகக் கோப்பையில் 3 சதங்கள் அடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்தார். அவருடன் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் மார்க் சாப்மேன் 39, டார்ல் மிட்சேல் 29, கிளன் பிலிப்ஸ் 41, மிட்சேல் சான்ட்னர் 26 ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.