
இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டம் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசி வங்கதேச அணியின் நான்கு விக்கெட்டுகளை 59 ரன்களுக்கு வீழ்த்தினர்.
ஆனால் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் தாஹித் ஹீரிடோய் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேச அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஐந்தாவது விக்கெட் இருக்கு இந்த ஜோடி பார்ட்னர் சிறப்பாக 101 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷாகிப் 85 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 80 ரன்கள் எடுத்து தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஹிரிடோய் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்த இவரும் 54 ரன்கள் ஆட்டம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த நசும் அகமது மற்றும் மெஹதி ஹசன் இருவரும் சிறப்பாக விளையாடி பங்களாதேஷ் அணி 250 ரன்கள் கடக்க உதவினர். இறுதியாக அந்த அணி 50 ஓவர்களில் 265 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் திலக் வர்மா விக்கெட்களை இழந்தது. இதிலிருந்து இந்திய அணியை கில் மற்றும் கேஎல் ராகுல் மீட்டனர்.