
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரில் வங்கதேச அணியானது 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வ்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
அதன்படி நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடிய வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டுமே இடம்பிடித்து விளையாடியதால் 10 புள்ளிகள் குறைந்துள்ளார். இதன்மூலம் ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியளில் ஷாகிப் அல் ஹசனுடன் இணைந்து இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 3ஆம் இடத்தில் நீடிக்கும் நிலையில், வங்கதேச தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா இரண்டு இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒரு இடம் பின் தங்கி ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.