
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில், பாகிஸ்தானை தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிரன ஆட்டத்திலும் இந்திய அணி படுதோல்வியை தழுவியது நாட்டு மக்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அணியுடன் நீடிக்கும் தீராப்பகையை போலவே, கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வெளியேற்றியது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் தோற்கடித்தது என நியூஸிலாந்து அணியும் இந்திய ரசிகர்களை கொதிப்படையவே செய்திருந்தது.
அதற்கெல்லாம் நேற்றைய ஆட்டத்தில் பழிதீர்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்துள்ளனர் இந்திய அணி வீரர்கள். விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான் என்றாலும், ஐசிசி தரவரிசையில் முன்னணியில் இருக்கும் ஒரு அணி, உலகளவில் அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெறும் ஒரு அணி, நூறு கோடிக்கும் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்திய அணி, மிக முக்கியமான ஆட்டங்களில் நிராயுதபானியாக வீழ்வது இந்தியர்களை கிரிக்கெட்டையே வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது.
போட்டி அட்டவணைகள் கூட இந்திய அணிக்கே சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், ஒரு வார காலம் பயிற்சிக்கு நேரமிருந்தும் இந்திய வீரர்கள் நேற்றைய தினம் களத்தில் செயல்பட்ட விதம் பாகிஸ்தான் ரசிகர்களை தவிர ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கோபமடையச் செய்திருக்கிறது.