
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி நாளை இலங்கை அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இந்த போட்ட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதன் மூலமாக இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். இதனால் நாளை நடக்கவுள்ள போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்திய நட்சத்திர ஆல் ரவுண்டரி ஹர்திக் பாண்டியா இன்னும் காயத்தில் இருந்து மீண்டு வராததால், நாளைய போட்டியில் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் அடங்கிய இந்திய பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது. முகமது ஷமியை பொறுத்தவரை இதுவரை 13 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி மொத்தமாக 40 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அதில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் முகமது ஷமியை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க கூடாது என்று ரசிகர்கள் மத்தியில் குரல்கள் எழுந்துள்ளது. ஹர்திக் பாண்டியா வந்தாலும், முகமது ஷமியை பிளேயிங் லெவனில் தொடர வேண்டும் என்று முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.