
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன், ஷபீக் 102 ரன்களைச் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியானது ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட்டின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களையும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனையடுத்து 7ஆவது விக்கெட்டுக்கு ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஜோடி தாக்குப் பிடித்து விளையாடினர்.
இதனால் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆகா சல்மான் 41 ரன்னுடனும், ஆமீர் ஜமால் 27 ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். பின்னர் 63 ரன்கள் எடுத்த நிலையில் சல்மான் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, என அடுத்தடுத்டு வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.