
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 89 ரன்களைச் சேர்த்தார்.
அதன் பிறகு விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. குறிப்பாக இப்போட்டியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், சிக்கந்தர் ரஸா போன்ற அதிரடி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர்.
அதிலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ஷஷாங்க் சிங், இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை நான் விளையாட வேண்டும் என பலமுறை கனவு கண்டுள்ளேன். அந்த கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.