
உலக அளவில் தற்போது டி20 கிரிக்கெட் என்பது சர்வதேச கிரிக்கெட்டுக்கு சவால் கொடுக்கும் வகையில் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளதற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் முக்கியமானவர் என்றால் மிகையாகாது. ஏனெனில் 2007இல் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையின் முதல் போட்டியிலேயே தென் ஆபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் பந்தாடி சதமடித்த அவர், அதிலிருந்து தன்னுடைய அதிரடி சரவெடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களைப் பந்தாடி ரசிகர்களிடைய டி20 கிரிக்கெட் மிகவும் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக இப்போதும் உலக சாதனை படைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் பலமுறை சூறாவளி புயலாக எதிரணிகளை பந்தாடியதை மறக்கவே முடியாது. அந்த வகையில் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் குவித்த வீரராக பல சாதனைகள் படைத்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்றே அழைக்கப்படுகிறார். அப்படி மகத்தான வீரராக கருதப்படும் அவரது கேரியரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியும் 2013 வருடமும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
ஏனெனில் அந்த அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் 2013 சீசனில் புனே அணிக்கு எதிராக 175* ரன்களை விளாசி டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம், அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் போன்ற பல உலக சாதனைகளை படைத்தார்.அதிலிருந்தே இந்தியாவில் குறிப்பாக பெங்களூருவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவெடுத்து இன்றும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியின் போது தாம் அடித்த சிக்ஸர் ஒரு ரசிகையின் மூக்கில் பட்டு மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியதாக கிறிஸ் கெயில் நினைவு கூர்ந்துள்ளார்.