
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை 11 போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் தனது 51ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்த நிலையிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியால் இப்போட்டியில் வெற்றியை ஈட்ட முடியவில்லை.
இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான், ஆர்சிபி வீரர் விராட் கோலியின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். அதன்படி ஐபிஎல் தொடரில் இலக்கை துரத்தும்போது 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்த வீரர்களில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்து ஷிகர் தவான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.