
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. அதனால் 1 – 1 என்ற கணக்கில் சமநிலை பெற்ற அந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் தரமான வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 27.1 ஓவரில் வெறும் 99 ரன்களுக்கு சுருண்டது. குயின்டன் டி காக் 6, டேவிட் மில்லர் 7 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸின் 34 ரன்களை எடுத்தார். மறுபுறம் அந்த அளவுக்கு அற்புதமாக பந்து வீசிய இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சபாஷ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 100 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களில் அவுட்டாகி நடையை கட்டிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் சுப்மல் கில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்து வெற்றியை உறுதி செய்து 8 பவுண்டரியுடன் 49 ரன்களில் அவுட்டாகி அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார். இறுதியில் ஸ்ரேயஸ் அய்யர் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 28* (23) ரன்கள் குவித்து ஃபினிசிங் கொடுத்ததால் 19.1 ஓவரிலேயே 105/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது.