
இந்திய அணியின் நட்சத்திர வீரர் செட்டேஸ்வர் புஜாரா தற்போது மீண்டும் வாய்ப்பு பெறுவதற்காக போராடி வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி மிகவும் மெதுவாக விளையாடும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவருக்கு, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட ராகுல் டிராவிட் இடத்தை நிரப்பும் அளவுக்கு பொறுமையின் சிகரமாக விளையாடிய அவர் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வந்தார்.
குறிப்பாக 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த அவர் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைப்பதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் கடந்த 2022 பிப்ரவரில் நேரடியாக நீக்கப்பட்ட அவர் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாடி மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
அந்த வாய்ப்பில் வங்கதேசம் மண்ணில் சதமடித்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்விக்கு காரணமாக அமைந்ததால் மீண்டும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து மீண்டும் இங்கிலாந்தின் கவுண்டி தொடங்கில் சசக்ஸ் அணிக்காக விளையாடிய அவர் தற்போது அதை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.