
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி 9 ரன்களிலும், ரிஷப் பந்த் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் இணைந்த ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 47 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 23 ரன்கள், ஷிவம் தூபே ரன்கள் ஏதுமின்றியும், அக்ஸர் படேல் 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 17 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.