
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணி கடந்த ஒன்றரை மாதங்களில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. உலகக் கிரிக்கெட்டில் வேறு எந்த அணிக்கும் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது என்று கூறலாம்.
காரணம் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் அணி கட்டாயம் அரையிறுதிக்கு உலகக்கோப்பையில் தகுதி பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மட்டும் இல்லாமல் பலரும் கூறி வந்தார்கள். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. பேட்டிங் துறையில் மூன்று வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் பத்து இடத்தில் இருந்தார்கள். பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது.
மேலும் ஒரு போட்டிக்கு களம் இறக்கப்படும் பாகிஸ்தான் அணியின் 11 வீரர்கள் யார் என்கின்ற தெளிவு இருந்தது. இதன் காரணமாக ஒவ்வொரு வீரருக்கும் என்ன ரோல் என்பதும் தெளிவாக இருந்தது. இதனால் பாகிஸ்தான் அணி கட்டாயம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு செல்லும் என்று பல நாட்டு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தார்கள். மேலும் ஒரு சிறிய அளவில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணியே பலமாக இருக்கிறது என்றும் கூறினார்கள்.