
இந்திய டென்னிஸ் முன்னாள் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இஸ்லாமிய முறைப்படி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பின்னர், பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லை தாண்டிய இவர்களின் திருமணம், தேசிய அளவில் பேசப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இஷான் என்று பெயரிடப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரியப் போவதாக தகவல் வெளியாகின. ஆனால் கடந்த ஆண்டு மகனின் பிறந்தநாளை சானியா மிர்சா - சோயிப் மாலிக் இருவரும் துபாயில் கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டனர். இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு இவர்கள் சேர்ந்து வாழ்வதாக கூறப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் தனது பயோவில், "ஹஸ்பண்ட் டூ ய சூப்பர் உமன் சானியா மிர்சா" என்ற வாசகத்தை அகற்றினார். இதனால் மீண்டும் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தகவல் உச்சத்தை எட்டியது. அதுமட்டுமல்லாமல் சானியா மிர்சா கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராமில் எந்த பதிவுமிடாமல் அமைதி காத்தார்.