
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியானது இன்று கார்டிஃபில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஏனெனில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வீரர் யார் என்ற போட்டி ஆஸ்திரேலிய அணியில் இருந்து வருகிறது. அந்தவரிசையில் ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் உள்ளிட்ட வீரர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் ஸ்டீவ் ஸ்மித்தை டி20 வடிவத்தில் ஆஸ்திரேலிய அணி சேர்க்காமல் இருப்பதால், இளம் வீரர்கள் இடையே போட்டி உள்ளது.