
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. இத்தொடரில் சுமார் 2 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் போட்டியில் 1 விக்கெட்டும் 2ஆவது போட்டியில் 3 விக்கெட்டுகளும் எடுத்து தம்மை சாம்பியன் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
குறிப்பாக 2ஆவது போட்டியில் வலது கை பேட்ஸ்மேனாக மாறி சவாலை கொடுத்த டேவிட் வார்னரை அவுட்டாகிய அவர் மற்றொரு தரமான ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனாக பாராட்டப்படும் மார்னஸ் லபுஷாக்னேவை சிறப்பான பந்தை வீசி கிளீன் போல்டாக்கினார். சொல்லப்போனால் பிரத்தியேகமான கேரம் பந்தில் எக்ஸ்ட்ரா வித்தியாசத்தை புகுத்திய அஸ்வின் எப்படி தம்மை கிளீன் போல்டாக்கினார் என்பது புரியாமல் லபுஷாக்னே மிகுந்த ஆச்சரியம் கலந்த ஏமாற்றத்துடன் பெவிலியின் திரும்பினார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் வழக்கமான 2 விரல்களைத் தாண்டி தம்முடைய 3வது விரலை பயன்படுத்தி அந்த கேரம் பந்தை வீசியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இந்த வித்தையை எப்போதோ செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இப்போதாவது செய்வதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.