
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார்.
இப்போட்டியில் 22-2 என்ற இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 98 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 79 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
அதன்படி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 63 இன்னிங்ஸ்களுக்குள் அதிக 50+ ஸ்கோரை பதிவுசெய்த வீரர்கள் அடிப்படையில் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை 68 ஒருநாள் போட்டிகளில் 63 இன்னிங்ஸில் 27ஆவது 50+ ஸ்கோரை பதிவுசெய்துள்ளார். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தனது 63ஆவது இன்னிங்ஸின் போது 29 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்தார் என்பது குற்ப்பிடத்தக்கது.