
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே ஷுப்மன் கில் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் இந்தியாவுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தினார். இந்த சூழ்நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரோஹித் சர்மாவுடன் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 16 பந்துகளை எதிர்கொண்ட அவரும் 4 ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு மற்றுமொரு சறுக்கலை கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதை விட அவர் அவுட்டான விதம் தான் ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த 2017இல் அறிமுகமான அவர் எப்போதுமே சுழல் பந்து வீச்சாளர்களை பாரமாக எதிர்கொண்டு வருகிறார். ஆனாலும் உயரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளை சரியாக எதிர்கொள்ள தடுமாறிய அவர் கேட்ச் கொடுத்து அவுட்டாவதை வழக்கமாக வைத்திருந்தார்.