
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் குறித்த பேச்சுகள் தொடங்கியதிலிருந்தே இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. ஏனெனில் இந்திய அணியில் விளையாடும் சில வீரர்கள் சர்வதேச தொடர்களையும் புறக்கணித்து ஐபிஎல் தொடருக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இந்திய அணியின் சில முக்கிய வீரர்கள் பிசிசிஐயின் எதிர்ப்பையும் மீறி இதனைச் செய்துவருவதுதான் ஆச்சரியமான விஷயம்.
அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு போட்டிகளில் சொதப்பிய காரணத்தால், எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் அவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாட பிசிசிஐயால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் பிசிசிஐ-யின் எச்சரிக்கையையும் மீறி அவர் ரஞ்சி கோப்பை தொடரை புறக்கணித்து வந்தார்.
மேலும் ஒருபடி மேல் சென்று காயம் காரணமாகவே ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழு தலைவர் நிதின் படேல், எந்தவொரு இந்திய வீரரும் புதிய காயங்களைச் சந்திக்கவில்லை என்றும், ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதற்கு தேவையான முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்றும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.