
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்று வரும் ஆறு நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த பயிற்சி ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அடுத்தடுத்து ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் நான்காம் நிலை வீரராக களமிறங்கி விளையாடுவார் என்று தெரிகிறது.
இந்திய அணி நீண்ட நாட்களாக தேடி வந்த நான்காம் இடத்திற்கான பேட்ஸ்மேன் என்று அனைவரும் ஷ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்த வேளையில் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது போட்டியின் போது காயம் காரணமாக அவர் அணியில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவின் அறிவுரைப்படி அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக தற்போது கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகிறார்.