
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹொல்கார் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிதறடித்தனர். குறிப்பாக ஓப்பனிங் வீரர்கள் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை தொடங்கினர். 85 பந்துகளை சந்தித்த கேப்டன் ரோகித் 101 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களை அடித்திருந்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த ஷுப்மன் கில், 2ஆவது போட்டியில் 40 ரன்களை அடித்திருந்தார். தற்போது 112 ரன்களை அடித்துள்ளதன் மூலம் இரு தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை அடித்தவர் பட்டியலில் பாபர் அசாமை சமன் செய்தார். பாபர் அசாம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடந்த 2016ஆம் ஆண்டு 360 ரன்களை அடித்தார். தற்போது கில் நியூசிலாந்துக்கு எதிராக 360 ரன்களை விளாசியுள்ளார்.