
நடப்பு ஐபிஎல் 16ஆவது சீசன் தற்பொழுது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இனி நடக்க இருக்கும் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிகளின் தலையெழுத்தை மாற்றி எழுதுவதாக இருக்கும். எந்த ஐபிஎல் சீசனிலும் இல்லாத அளவிற்கு புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது. மறுபுறம் பந்துவீச்சில் பெரிய பலம் இல்லாத பொழுதும் மும்பை இந்தியன்ஸ் அணி 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இது ஒருபுறம் என்றால் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 11 ஆட்டங்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது ரன் சராசரி 17, ஸ்ட்ரைக் ரேட் 124 மட்டும்தான். அவரது மோசமான ஐபிஎல் பார்ம் மூன்றாவது ஆண்டாகத் தொடர்கிறது. நேற்று வான்கடேவில் மிக முக்கியமான போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக ஒற்றை இலக்க ரன்னில் வழக்கம்போல் வெளியேறி ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை உடைத்தார்.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் எப்படி பார்க்கிறது? என்றும், அவருக்கு மேலும் தொடர்ந்து வாய்ப்புகள் தரலாமா? என்றும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சைமன் டௌல் தனது கருத்தை கூறியிருக்கிறார்.