இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் கனவாக இருந்தது - ரிஷப் பந்த்!
சிறுவயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய கனவாக இருந்தது என இந்திய அணி விக்கெட் கீப்பர் பெட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பை பெறமுடியவில்லை. ஏனெனில் அணியின் முதன்மை கீப்பர் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, ரிஷப் பந்திற்கு பிளேயிங் லெவனில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
Trending
இருப்பினும், வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனில் தனது புதிய உரிமையாளரான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ரிஷப் பந்த் வழிநடத்த உள்ளார். கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்ததுடன், அவரை கேப்டனாகவும் நியமித்துள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், சிறுவயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய கனவாக இருந்தது என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சிறுவயதிலிருந்தே எனக்கு ஒரே ஒரு கனவுதான் இருந்தது - இந்தியாவுக்காக விளையாட வேண்டும். ஐபிஎல்லில் விளையாடுவது பற்றி நான் ஒருபோதும் யோசித்ததில்லை. இன்று மக்கள் ஐபிஎல்லில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயமாக, இது ஒரு சிறந்த தளம், ஆனால் உங்கள் இலக்கு உங்கள் நாட்டிற்காக விளையாடுவது என்றால், ஐபிஎல் உட்பட மற்ற அனைத்தும் இறுதியில் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.
உங்களுக்கு அந்த பெரிய மனநிலை இருந்தால், வெற்றி பின்தொடரும். நான் எப்போதும் ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நம்பினேன், கடவுளின் அருளால் எனக்கு 18 வயதிலே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு மோசமான கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த், அதன்பின் ஓராண்டுக்கு மேலாக கிரிக்கெட் களத்திற்கு திரும்பாமல் இருந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்திருந்த ரிஷப் பந்த், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார். பின்னர் அத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர், தற்போது இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பந்த் தலைமையில் லக்னோ அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now