
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியானது வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் 9 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிராத்வைத் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக, இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கும் 254 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் மீண்டும் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரையும் சமன்செய்துள்ளது.