SL vs AFG, 1st ODI: ஒமர்ஸாய், நபி போராட்டம் வீண்; ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளமென உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 182 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Trending
அதன்பின் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 88 ரன்களைச் சேர்த்திருந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 16 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா 45 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிஷங்கா 20 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 210 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரான் 4 ரன்களுக்கும், ரஹ்மத் ஷா 7 ரன்களுக்கும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 7 ரன்களுக்கும், குல்பதின் நைப் 16 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 55 ரன்களுக்குள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது நபி - அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கு பறக்கவிட்டார். இதனால் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.
இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது நபி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அத்துடன் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 242 ரன்கள் என்ற இமாலய பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அசதினர்.
அதன்பின் 15 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 136 ரன்களை குவித்திருந்த நிலையில் முகமது நபி தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் போராடி வந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 13 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 149 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தா. இருப்பினும் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை மட்டுமே சேர்க்கமுடிந்தது.
இதன்மூலம் இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் இறுதிவரை போராடியும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தோல்வியே மிஞ்சியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1- 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now