
ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயண் மேற்கொப்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியிலும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 ரன்களில் ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த பதும் நிஷங்கா இப்போட்டியில் வெறும் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் இணைந்த கேப்டன் குசால் மெண்டிஸ் - சதீரா சமரவிக்ரமா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 52 ரன்களுக்கு சமரவிக்ரமாவும், 61 ரன்களுக்கு குசால் மெண்டீஸும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா - ஜனித் லியானகே இணையும் பொறுப்பாக விளையாடியதுடன், இருவரும் அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.