
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் ஆறு ஓவர்களிலேயே இலங்கை அணி 55 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் 25 ரன்கள் எடுத்திருந்த பதும் நிஷங்காவின் விக்கெட்டை அஸ்மதுல்லா ஒமார்சாய் கைப்பற்றினார். அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த குசால் மெண்டிஸ் ஃபசல்ஹக் ஃபரூக்கு பந்துவீச்சில் நூர் அஹ்மதிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த தனஞ்செயா டி சில்வா - சதீரா சமரவிக்ரமா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சமரவிக்ரமா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் தனஞ்செயா டி சில்வா 11 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கேப்டன் வநிந்து ஹசரங்கா 22 ரன்களிலும் என அடுத்தடுத்து முகமது நபி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய சரித் அசலங்கா 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து சமரவிக்ரமாவுடன் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீரா சமரவிக்ரமா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.