
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஃப்கானிஸ்தன் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இப்ராஹ்மி ஸத்ரான் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் குர்பாஸுடன் இணைந்த ரஹ்மத் ஷா அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ரஹ்மத் - அஸ்மதுல்லா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். இதில் ரஹ்மத் ஷா அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 65 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி இக்ராம் அலிகில் 32 ரன்களிலும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 54 ரன்களுடனும் என ஆட்டமிழந்தனர்.