
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். அதன்படி சிராஜ் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொண்ட பதும் நிஷங்கா விக்கெட்டை இழந்து இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அவிஷ்கா ஃபெர்னாண்டோவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை தடுத்தார். மேற்கொண்டு இருவரும் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாச அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது.
இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரிகளுடன் 30 ரன்களைச் சேர்த்திருந்த குசால் மெண்டிஸும் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா - கேப்டன் சரித் அசலங்கா இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.