
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடிந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை மறுநாள் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஏற்கெனவே இத்தொடரில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ள இந்திய அணியானது, மூன்றாவது போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, அக்ஸர் படேல் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை.