SL vs IRE, 2nd Test: பால்பிர்னி, ஸ்டிர்லிங் , டக்கர் அசத்தல்; வலிமையான நிலையில் அயர்லாந்து!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேம்ஸ் மெக்கலம் - பீட்டர் மூர் இணை களமிறங்கினர்.
Trending
இதில் பீட்டர் மூர் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேம்ஸ் மெக்கலமும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஆண்ட்ரூ பால்பிர்னி - பால் ஸ்டிர்லிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி அதிரடியாக விளையாடி வந்த பால் ஸ்டிர்லிங் 74 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்குத் திரும்பினார் . அவரைத்தொடர்ந்து வந்த லோர்கன் டக்கரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
ஆனால் மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரூ பால்பிர்னி 95 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து, 5 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைச் சேர்த்தது.
இதில் லோர்கன் டக்கர் 78 ரன்களுடனும், கர்டிஸ் காம்பெர் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now