
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது இன்று தொடங்கிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தாம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்தை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பவுண்டரிகளையும் விளாசித்தள்ளினர். இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் தங்களது 4அவது சர்வதேச ஒருநாள் சத்ததைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.