
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கத்தில் தடுமாறினாலும், நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் இணைது சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குசால் மெண்டிஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் பெரேரா அதிரடியாக விளையாடியதுடன் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த பதும் நிஷங்கா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 12ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.