இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் இன்று நியமித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்து படுதோல்விகளைச் சந்தித்ததுடன் லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
இதனையடுத்து அணியின் ஆலோசகர் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னே மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தங்கள் பதவியில் இருந்து விலகினர். இதன் காரணமாக இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுத்திருந்தது.
Trending
அவரது தலைமையின் கீழ் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி இழந்த போதும், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய இலங்கை அணி தொடரை இழந்த போதும் கடைசி போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை ஒரு நாள் தொடரிலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரிலும் வென்றிருந்தது.
அதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தலைமை பயிற்சியாளராக இவரது சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து, முழு நேரப் பொறுப்பை ஜெயசூர்யாவுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்தவகையில் சனத் ஜெயசூர்யா முழு நேர தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, இலங்கை அணி முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடரில் வருகின்ற 13ஆம் தேதி மோதவுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இலங்கை கிரிக்கெட் அணிக்காக கடந்த 1991ஆம் அறிமுகமான சனத் ஜெயசூர்யா, 110 டெஸ்ட் போட்டிகளில் 14 சதம், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களையும், 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 28 சதம், 68 அரைசதங்களுடன் என 13,480 ரன்களையும், 31 டி20 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 629 ரன்களையும் குவித்துள்ளார். மேற்கொண்டு கடந்த 1996ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இலங்கை அணிலும் ஜெயசூர்யா முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now