
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து இரண்டு போட்டியிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதியும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மூன்றாம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுவதாக இருந்தது. மேலும் இத்தொடர் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடாங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் பாதுகாப்பு காரணங்களால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்சமயம் இலங்கை கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறது. மேலும் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருப்பதால் இரு அணிகளுக்கும் இது பற்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.