
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் போட்டியில் சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சௌராஷ்டிரா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சௌராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் தரங் கோயல் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஹர்விக் தேசாய் மற்றும் பிரெரக் மான்கட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹர்விக் தேசாய் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மான்கட் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து 55 ரன்களைச் சேர்த்திருந்த ஹர்விக் தேசாயும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ருச்சித் அஹிர் - சமார் கஜ்ஜர் இணை அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசித்தள்ளினர். இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 56 ரன்னில் ருச்சித் அஹிர் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த விஷ்வராஜ் ஜடேஜாவும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார்.