
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் உத்தரகாண்ட் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய உத்தரகாண்ட் அணியானது சமர்த் மற்றும் ஆதித்யா டாரே ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சமர்த் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களையும், ஆதித்யா டாரே 2 பவுண்டரி, 5 சிக்ஸர்களையும் விளாசி தலா 54 ரன்களைச் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் விஷல் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு ஆர்யா தேசாய் மற்றும் உர்வில் படேல் இணை வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் 23 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆர்யா தேசாய் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அபிஷேக் தேசாயும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் பவுண்டரி மழை பொழிந்த ஊர்வில் படேல் 36 பந்துகளில் சதமடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.