
இந்தியாவில் நடைபெற்றுவரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பரோடா அணிக்கு ஷஷ்வத் ராவத் - அபிமன்யூ சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிமன்யூ சிங் 9 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஷஷ்வத் ராவத்துடன் இணைந்த கேப்டன் குர்னால் பாண்டியா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் குர்னால் பாண்டியா 30 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பானு பனியா 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ஷஷ்வத் ராவத் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஷிவாலிக் சர்மா ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பண்டியா 5 ரன்னிலும், விஷ்னு சொலங்கி 6 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் அதித் ஷெத்து அதிரடியாக விளையாடி 22 ரன்னில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவாலிக் சர்மா 36 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் பரோடா அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.