
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தியது.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை சிறப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரதிகா ராவல் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் ஒருபக்கம் நிதானமாக விளையாட மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 116 ரன்களைச் சேர்த்த கையோடு மந்தனா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்லீன் தியோலும் 47 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.