
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் கடைசி போட்டியானது நாளை நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனித்துவ சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளர். அதன்படி, இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 35 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை எனும் சாதனையி இலங்கை கேப்டன் சாமரி அதபத்து வைத்துள்ளார்.