
ஆஸ்திரேலியாவில் நடபெற்று வரும் நடப்பு சீசன் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்காச்சர்ஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தனா - காடி மேக் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா மற்றும் காடி மேக் ஆகியோர் தலா 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய லாரா வோல்வார்டும் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் எனா 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. பெர்த் அணி தரப்பில் சிறப்பான பந்துவிச்சை வெளிப்படுத்திய அலானா கிங் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சோஃபி டிவைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.