
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2ஆவது டி20 போட்டி அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் உள்ள மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட் செய்த போது ஆடு களத்திற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
இந்த போட்டியின் 8ஆவது ஓவர் வீசப்படுவதற்கு முன்னதாக பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பாம்பை பிடிக்க மைதான ஊழியர்கள் தேவையான கருவிகளுடன் விரைந்து சென்றனர்.
அதனை கவனித்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அந்த படத்தை பகிர்ந்திருந்தனர். சிலர் வியப்பினால் சுவாரஸ்யமான கேப்ஷனை அந்த படத்திற்கு போட்டிருந்தனர். என்றாலும் போட்டிக்கு நடுவே மைதானத்தில் பாம்பு புகுந்தது மைதான நிர்வாகத்தின் கவன குறைவு என்று அசாம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், அசாம் கிரிக்கெட் சங்கம் ( ஏசிஏ) செயலாளர் தேவஜித் சைகியா இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.